உ.பி அதிர்ச்சி: `ஒவ்வொரு முறையும் ரூ.30 லஞ்சம்!’ – ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய 6 வயதுச் சிறுவன்

ச்இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவத் தொடங்கிய நாள் முதல், மருத்துவமனைகளின் அலட்சியங்கள் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பீகாரில் உறவினருக்காக ஆக்ஸிஜன் கேட்டு ஓடும் பெண், அதே மாநிலத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை, உத்தரப்பிரதேசத்தில் மருத்துவர்கள் தொட மறுத்ததால் இறந்த குழந்தையைக் கட்டியணைத்து அழும் தந்தை உள்ளிட்ட அவலங்களைச் சுட்டிக்காட்டிய வீடியோக்களைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவன் ஸ்ட்ரெச்சரை வார்டில் இருந்து தள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தியோரியா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தனது தாத்தாவை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு அழைத்து செல்ல தனது தாயுடன் இணைந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்கிறார். அதாவது, ஸ்ட்ரெச்சரை சிறுவனின் தாய் முன்னால் இருந்து இழுக்க, சிறுவன் பின்னால் இருந்து தள்ளிச் செல்கிறார். சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ பலரது கவனத்துக்கும் சென்றதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

Also Read: உ.பி அதிர்ச்சி: குழந்தையைத் தொட மறுத்த மருத்துவர்கள்! – உடலைக் கட்டியணைத்து அழுத தந்தை

பர்காஜ் மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தைச் சேர்ந்த சேதி யாதவ் சில நாள்களுக்கு முன்பு உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைசிகிச்சை செய்வது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி மிகவும் பலவீனமாக இருப்பதால், அவரின் மகள் மருத்துவமனையில் இருந்து சேதி யாதவைக் கவனித்து வருகிறார். அவரின் மகளும் சிறுவனின் தாயுமான பிந்து ஸ்ட்ரெச்சரை இழுத்துச் சென்றது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வார்டில் உள்ள ஊழியர், ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெச்சரை இழுத்துச் செல்வதற்காக ரூபாய் 30 கேட்கிறார். நான் பணம் கொடுக்க மறுத்தபோது ஸ்ட்ரெச்சரை இழுத்துச் செல்ல மறுத்துவிட்டார். எனவே, என் மகனின் உதவியுடன் நான் இழுத்துச் சென்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

சிறுவன்

சிறுவனின் வீடியோவைப் பார்த்த அம்மாவட்ட மேஜிஸ்திரேட் அமித் கிஷோர், நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவர்களுடன் கூட்டம் நடத்தி விசாரணை, நடத்த உத்தரவிட்டதோடு விரைவில் இதுதொடர்பான அறிக்கையை சமர்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட வார்டு ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடினமான சூழ்நிலை நிலவும்போது மருத்துவமனைகளில் நடக்கும் அலட்சியங்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் உட்பட பலரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பீகார்:`மருத்துவர்கள், ஆக்ஸிஜன் இல்லை; திணறும் நோயாளிகள்!’ – அதிரவைக்கும் வீடியோக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *