கொரோனா: `மீண்டு வந்த முதியவர்!’ – நெகிழவைத்த புதுக்கோட்டை இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடியைச் சேர்ந்த 58 வயது முதியவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ராணியார் மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஜாதகம் கணிப்பாளராக இருந்துள்ளார். ஜாதகம் பார்க்க வந்தவர்களிடம் இருந்துதான் இவருக்குத் தொற்று ஏற்பட்டதாகவும், நாகுடி பகுதியில் தொற்று பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் என்றும் கூறப்படுகிறது.

கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர்

தொடர்ந்து, குடும்பத்தினருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் மனைவிக்குத் தொற்று இருந்தது தெரியவந்தது. அவர் மனைவியும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்குப் பிறகு, கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் சொந்த ஊர் திரும்பினார். முன்னதாக, இவரை வரவேற்க நாகுடி பேருந்து நிறுத்தம் அருகே 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர்.

முதியவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகுடிக்கு வந்திறங்கிய நிலையில், அவருக்கு அங்கு கூடியிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வீட்டிற்குக் கூட்டிச் சென்றனர். வழி நெடுகிலும், பெண்கள் பலரும் கை கூப்பி வணங்கி வரவேற்றனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டு வீடு திரும்பியவரை, இளைஞர்கள் மேள தாளங்கள் முழங்க வரவேற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடி வரவேற்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *