பெண்ணின் கள்ளத்தொடர்பு 2 மகன்களின் உயிரை பறித்தது..!


மதுரை அருகே இளம்பெண்ணின் கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறு அவருடைய 2 மகன்களின் உயிரை பறிக்க காரணமாகிவிட்டது. அவர்களுக்கு விஷம் கொடுத்ததுடன், தானும் தின்று தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணின் கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 42), ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி உஷாராணி (30). இவர்களுக்கு கோப்பெருஞ்சோழன் (8), சித்தார்த்தன் (6) என்ற 2 மகன்கள்.

உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அங்கு தூய்மைப்பணி மேற்பார்வையாளராக பணிபுரிபவர் கனகராஜ் (49).

இந்தநிலையில் உஷாராணிக்கும், கனகராஜூவுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் உஷாராணியின் கணவர் குமாருக்கு தெரியவந்த நிலையில் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உஷாராணி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். எனவே மிகுந்த மனவருத்தத்தில் இருந்த குமார் வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.

நேற்று காலையில் பாலமேட்டில் மதுரை சாலை பகுதியில் கனகராஜ் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்து குமார் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கனகராஜ், மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் குமார் தனது மகன்களான கோப்பெருஞ்சோழன், சித்தார்த்தன் ஆகியோரை அழைத்து கொண்டு பாலமேடு அருகே உள்ள கண்ணாடி கருப்புசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு தான் வாங்கி வந்த வயலுக்கு தெளிக்கும் குருணை மருந்தை உணவுடன் கலந்து தனது மகன்களுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். சற்று நேரத்தில் 3 பேரும் மயங்கி கிடந்துள்ளனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இதை கவனித்து பாலமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் இளைய மகன் சித்தார்த்தன் இறந்து விட்டான்.

உயிருக்கு போராடிய குமார் மற்றும் அவரது மூத்த மகன் கோப்பெருஞ்சோழன் ஆகியோரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோப்பெருஞ்சோழனும் பரிதாபமாக இறந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனை அவருடைய 2 மகன்களின் உயிரையும் பறித்துவிட்டது. இந்த சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குமாரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *